கவிமாலை 239 – ஏப்ரல் 2020

 

கவிமாலை 239 – மாதாந்திரச் சந்திப்புக்கு  கால்களற்ற தெரு என்ற தலைப்பில் போட்டிக்கு வந்த கவிதைகள். 

 

கவிதைப் போட்டியில் பரிசுபெற்றவர்கள்

முதல் பரிசு
அஷ்ரப் (1)

இரண்டாம் பரிசு
மோகனப்ரியா (22)
பழ.மோகன் (17)
இரா.அருள்ராஜ் (9)

மூன்றாம் பரிசு
ஜோசப் சேவியர் (20)
ஷ்யாம் குமார் (14)
பிரபு பாலா (19)

ஊக்கப் பரிசு
பெ.அருமைச்சந்திரன் (33)
நாகூர் அனீஸ் அகமது (6)

விதைகள் புத்தகப் பரிசு
சரண்யா முசிலா (2)
முத்து சுவேதா (12)
ஸ்ரீநிதி (15)

வாட்சப் படக்கவிதை பரிசு
தேன்மொழி அசோக்

போட்டிக்கவிதைகளுக்கான நடுவர்
கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி

 

—————————————————————————————–“ கால்களற்ற தெரு ” போட்டிக் கவிதைகள் ஓர் பார்வை

வழங்கியவர்:  கவிஞர் தாயுமானவன் மதிக்குமார்

—————————————————————————————–

இம்மாதப் போட்டிக்கவிதைகளை ஒன்றிற்கு இரண்டு முறை படித்து, எனது வாசிப்பனுபவத்தைப் பகிர விரும்பினேன். இரண்டு பிரிவுகளாகக் கவிதைகளைப் பிரித்திருக்கிறேன். . என்னைக் கவர்ந்த, பிடித்த கவிதைகள், இன்னும் கொஞ்சம் மாற்றமோ, மெனக்கெடலோ இருக்கலாம் என்று ஒரு பகுதியாகவும் பிரிக்கிறேன். இன்னும் கொஞ்சம் மெனக்கெடலும், சுருக்க வேண்டியோ சில மேம்படுத்த வேண்டிய மாற்றமோ தேவையென இருந்தாலும், சிந்தனையும் முயற்சியும் பாராட்டப்பட வேண்டியது. அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இது முழுக்க முழுக்க எனது வாசிப்பனுபவத்தைச் சார்ந்தது மட்டுமே இதைத் தொடர்ந்து விவாதிக்கலாம். நல்ல ஆரோக்கியமான விவாதத்தை நான் விரும்புகிறேன். யாரையும் குறை கூறவோ, சுட்டுவததோ என்னுடைய நோக்கமில்லை.

என்னைக் கவர்ந்த கவிதை வரிகள்:

முதல் கவிதை: கவிதை எண்: 1
“இராஜபாட்டைகளும் புறஞ்சேரிகளும்
யாருமற்ற அமைதியைக் கடத்துகின்றன
பேதமின்றி நிம்மதி பெருமூச்சுடன்..”

இந்தக் கவிதையில், கால்களற்ற தெரு என்ற தலைப்புக்கும்
இதில் கவிஞர், தனது சுய அரசியலையும், சுய ஆசையையும் கவிதையில் ஏற்றித் தலைப்போடு முடிச்சுப்போட்ட விதம் எனக்குப் பிடித்ததாக இருக்கிறது. வார்த்தைகள் கூட பயன்படுத்திய வார்த்தைகள் தான். ஆயினும் அந்தச் சிந்தனை எனக்குப் பிடித்தமானதாக இருந்தது. இதே கவிதையில் விமர்சனங்களும் இருக்கிறது. பின்பு பார்க்கலாம்.

கவிதை எண்: 7
“எண்சுமந்த வாகை மரம்” எனத் தொடங்கும் கவிதை.
வந்த கவிதைகள் அனைத்துமே, இயற்கையை நோக்கியோ, பழைய நிலைமைக்குத் திரும்புகிறோம், இயற்கை ரொம்ப அமைதியாக, ஆசுவாசமாக இருக்கிறது என்ற பொருளில் இருந்தன.

இந்தக் கவிதை, கொஞ்சம் நிறைய மெனக்கெட்டு, நுட்பமாக உழைத்து எழுதியிருப்பதாகவே தெரிகிறது. கவிதையின் வரிகளைப் படிக்கப் போவது இல்லை. ஆயினும் இந்தக் கவிதையும் சரி, கவிதை எண்: 9 இரண்டிலுமே ஒரு மெனக்கெடல், அவர்களுடைய உழைப்பு இருப்பது தெரிகிறது.

கவிதை எண் 7 இல் பிடித்த வரிகள்.
“பிச்சிப்பூவின் சொட்டுத்தேனுக்காக
கொத்தின் ஒற்றைப்பூவை விழுங்கிச்சுவைக்கும் தேன்சிட்டுகள்..”

அந்த கவிஞர், நுட்பமாக யோசித்து எழுத வேண்டுமென்ற உழைப்பு தெரிகிறது.

கவிதை எண்: 8
நிறைய இதே போல் இருக்கிறது. கொஞ்சம் மனதைத் தொடும் வரி,

“வாசல் தாண்டாத கால்களால்
வீடெங்கும் பாசமும், அன்பும் நிரம்பி
வீதிகளிலும் வழிந்தோடியது.

– இது நல்ல கற்பனை. வீட்டினுள் இருக்கும் அன்பெல்லாம் நிறைந்து வீதியில் ஓடியதென்று சொன்னது. நன்றாக உள்ளது.

கவிதை எண்: 9

மற்றக் கவிதைகளை விட வித்தியாசமாகவும், நுட்பமாகவும் இருக்கிறது.

“கடுங்குளிரின் கொடுவெய்யிலின் தட்பவெட்பத் தகிப்பு
அடர்மழைக்கும் சூறைக்காற்றுக்கும் பிந்திய நசநசப்பு “

அதாவது, இத்தனை காலகட்டங்களைக் கடந்தும், அந்த கால்களற்ற தெரு நான் என்று கடைசியில் முடித்திருப்பார்கள். அது ஒரு விதமான ஓஷோவின் சிந்தனையை, ஜென் மன நிலையை இக்கவிதைக்குக் கொடுக்கிறது. வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம். ஆனாலும் வந்தக் கவிதைகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்த கவிதை வித்தியாசமாக இருந்தது.

கவிதைகள் எண் போட்டு முக நூலில் பதித்திருக்கிறார்கள். அதே வரிசையில் தான் எனக்கும் வந்தது. எழுதியவர்கள் தெரியாது.

எனக்கு யார் இந்த கவிதைகளை எழுதினார்கள் என்பது தெரியாது. அது தெரிந்து கொள்ள முயற்சியும் நான் எடுக்கவில்லை. யார் எழுதினார்கள் எனத் தெரிந்தால், அது சரியான விமர்சனமாக இருக்காது என்பதால் தெரிந்து கொள்ளவில்லை. அதன் படி,

கவிதை எண்: 11

“சருகுகள் காற்றில் அசையும் சத்தம் கேட்டு
இரைதேட சென்ற இரண்டு எறும்புகள்
சற்று இளைப்பாறி நின்றன.

பிடித்தது என்னன்னா, இரண்டு எறும்பு தெருவில் பேசிக் கொண்டு போவது நன்றாக இருந்தது. போகப் போக பிரச்சார. உத்தி வந்துவிட்டது. ஆயினும், இரு எறும்புகள் பேசிக் கொண்டு போவது போல் இருக்கும் கற்பனை எனக்குப் பிடித்திருந்தது.

கவிதை எண்: 14
இது ஒரு ஆரம்ப நிலை கவிஞரோ, ஒரு மாணவரோ எழுதிய கவிதை போன்ற தோற்றத்தை இது தந்தாலும், இந்த கற்பனையைச் சொல்ல வேண்டுமென்பதால் நான் எடுத்துக் கொண்ட கவிதை இது. ஒரு தெரு வந்து, எல்லாரையும் வாங்க வந்து மிதிங்க என்று சொல்லிவிட்டு, கடைசில ஒரு தெரு,

“இப்படிக்கு, கால்நீட்டிக் கெஞ்சும் கால்களற்ற தெரு” – என்று முடித்திருப்பார். ஒரு தெரு கால் நீட்டி உட்கார்ந்து கெஞ்சினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். ஆகவே, இந்தக் கவிதை பிடித்திருக்கிறது.

அடுத்து,

கவிதை எண்: 17

வந்த 34 கவிதைகளிலிலுமே ஒரு நிமிடம் திடுக்கிட வைத்த கவிதை எனலாம். நாம் இருக்க இருக்க, இயற்கையைக் கையாள்கிற விதம் ஒவ்வொரு நாளும் மோசமாகிக் கொண்டே இருக்கிறது. சிங்கப்பூர்ச் சூழல் அந்த மாதிரி இல்லை என்று நினைத்துக் கொண்டாலும், பொதுவாகவே, ஒரு கடற்கரை, நகரம், ஏன் கிராமத்தில் கூட நமக்கு என்ன பிடிக்கிறதோ அதையே செய்து கொண்டு இருக்கிறோம். இயற்கை குறித்து நாம் யோசிக்கவில்லை. ஆனாலும், அதன் விளைவுகளை இயற்கை நாளுக்கு நாள் நமக்குக் காட்டிக் கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில், இந்தக் கவிதை மனிதர்களிடத்தில் ஒரு குற்ற உணர்வை, ஏன் எனக்கு முதலில் படித்ததும் ஒரு குற்ற உணர்வை இந்தக் கவிதை உண்டு பண்ணியது.

“முதன்முறையாக சொந்த நிறத்தில் பூக்கிறது
ஒரு தும்பைப் பூ”

எவ்வளவு பெரிய தாக்கம். இப்ப தான் முதன்முறையாக தும்பைப்பூ தனது சொந்த நிறத்தில் பூக்கிறது. அந்த அளவிற்கு நாம் இந்த பூமியினை மோசாக்கியிருக்கிறோம். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
அடுத்து, கவிதை எண்: 19,

சந்தத்தோடு எழுதிய கவிதை சிறப்பாக இருந்தது. இன்னும் மரபில் இவர் சிறப்பாக வருவார் என்று தெரிகிறது. ஏனெனில், வெறும் சந்தத்திற்காக மட்டுமே நான் சொல்லவில்லை. சந்தத்தோடு சேர்த்து சிந்தனையையும் உள்ளே வைத்திருக்கிறார்.

“வானேறி மதிமண் மீதடிவைத்த மனிதன்
தானேறிய தெருவிலடி வைக்கத் தடுத்து
வீடேறிய கதிக்கு விடைநீயென உணர்த்தி
நானேறிய மதிமடை திறந்து இறைவாவென”

அதாவது, நிலாவிலேயே கால் வைத்த மனிதன், இன்று தன் வீதியில் கால் வைக்க இயலாமல் வீட்டுக்குள்ளேயே இருக்கிறான் என்ற பொருள் நன்றாக இருந்தது.

அடுத்து கவிதை எண்: 27

கொஞ்சம் வார்த்தைப் பிரயோகம் அதிகமாகவும், கிளிசே சொற்களாக இருந்தாலும் சில மெனக்கெடல் நன்றாக இருந்தது.

“தரைச்சேலை உடுத்திய தெருநங்கை”

“தன்வீடு தனைச்சுமந்த நத்தையொன்று
தடையின்றி ஊர்ந்தது கண்டு”

நத்தை தன் சொந்த வீட்டைச் சுமந்து செல்வதைப் போல என்ற படிமம் பிடித்திருந்தது.

அடுத்து,

கவிதை எண்: 31

இதில் பெரிதாக கவித்துவமிக்க சொற்கள் இல்லையெனினும், சிந்தனையிலும், சிங்கப்பூர்ச் சூழலை பகடி பண்ணுவது போலவும் இருந்தது ரசிக்க வைப்பதாக இருந்தது.

“கால்களற்ற தெருவில் கவிதை மட்டும்
தனியே தவிக்கிறது
யாருமற்ற தனிமையில் துயரங்களுடன் நடந்து
அதற்குப் பழக்கமில்லை
கைத்தட்டல்கள், பொன்னாடைகள், புகழாரங்கள்
புதுப் புத்தக வாசனையுடன்
புன்னகைகளுக்கு இடையே
மேடையேறி அரங்கேறும்”

அடுத்த பகுதி,
எண் குறிப்பிட அவசியமில்லையென நினைக்கிறேன். மிச்ச கவிதைகளில் “கூறியது கூறல்” என்ற தோணி அதிகமாக இருந்தது. எல்லோருமே, இயற்கையோடு பின்னிப் பிணைந்த வாழ்வு பற்றியோ, அதை இழந்துவிட்டோம் என்றோ, இயற்கையைக் கெடுத்துவிட்டோம், ஆகவே தான் இப்படி நடக்கிறது என்ற கருத்தோ, கவிதைகளுக்குள் பிரச்சார உத்தியோ அதிகம் இருக்கிறது.

“ஏ மனிதா.. தீப்பந்தத்தை எடு..
புரட்சி பொங்கட்டும்”
என்பது போன்ற தொனி, பல வருடங்கள் முன்பே முடிந்துவிட்டது என நினைக்கிறேன். இப்பொழுதுள்ள பிரச்சார தொனி என்பது பிரச்சாரமல்லாத பிரச்சாரக் கவிதை. அதாவது, கவிஞர். தங்கமணியின் கவிதையொன்றை உதாரணமாகக் கூறலாம். அது ஒரு பிரச்சாரக் கவிதை, ஆயினும் எந்த ஒரு இடத்திலும் கவிதையில் பிரச்சாரத் தொனியோ, அறிவுரை சொல்வதோ இருக்காது. இரண்டு வரிகளில் தான் கவிதையின் உயிர் இருக்கும்.
வரிகள் நினைவில்லை.
“எங்கள் வீட்டின் கூரை வந்து அடிக்கடி பற்றக்கூடிய தீ
எங்கள் வீட்டு சமையலறையில் பற்ற மாட்டேங்குது, என்பது போன்ற கவிதையொன்றை எழுதியிருப்பார். இதை விட எளிய மக்களின் வாழ்வை, சாதிய அநீதிகளைச் சுட்டக் கூடிய பிரச்சாரக்கவிதை இல்லையெனலாம். எந்த இடத்திலும், புரட்சி ஓங்குக, என்றோ, அறிவுரை போலவோ, உணர்ச்சியைத் தூண்டுவது போலவோ எழுதியிருக்க மாட்டார். மெல்ல உணர்வினைக் கடத்திக் கொண்டு வந்து, கடைசியில் கவிதையில் லேசாக குத்த வைப்பார். அது போன்ற கவிதைகள் தான் தற்காலத்தில் ஏற்புடையதாக இருக்கின்றன.

நிறைய கவிதைகள் காலத்தைச் சொல்லக் கூடியதாக இருந்தது. ஒரு வாரம் வீடடங்கி இருந்தோம் போல. அது ஒருவேளை முக நூலில் எழுத வேண்டுமானால் சரியாக இருக்கும். நிறைய கவிதைகளில் பிரச்சார நெடி அதிகமாக இருந்தது. கவித்துவம் அதனால் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். கவித்துவம் அதிகமாக இருந்திருக்கலாம் என்று தோன்றியது. இது யாரையும் புண்படுத்துவதற்காக நான் கூறவில்லை. கவிமாலையும் கண்டிப்பாக அதற்கு ஆதரவு கொடுக்காது. இந்த அங்கத்தின் நோக்கம் என்னவென்றால், உங்கள் மனதிலும் எங்கள் நல்ல கவிதை இன்னும் எழுதப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அது தான் கவிமாலையின் முக்கிய நோக்கம் என்று நினைக்கிறேன்.

 நன்றி. 

—————————————————————————————-

போட்டிக்கவிதைகள்

கவிதை எண் : 1 – அஷ்ரப்

கால்களற்ற தெரு

சலனமற்ற வீதிகளின் நிசப்தத்தில் கரைகின்றன
நிலமதிரும் நடையோடு அதிகாரம் செலுத்திய
கால்களின் வன்மமும் பெருமிதமும்…

இராஜபாட்டைகளும் புறஞ்சேரிகளும்
யாருமற்ற அமைதியைக் கடத்துகின்றன
பேதமின்றி நிம்மதி பெருமூச்சுடன்…

திண்ணைகளில் வழிந்தோடும் வெயிலும்
சுட்டெரிக்கத் தேடி அலைகிறது தெருவெங்கும்
ஆணவ ஆன்மா சுமக்கும் உடல்களை…

காற்றின் திசையில் உருண்டோடும் சருகுகளின் பேச்சும்
பூ உதிர முருங்கைமரத்தில் ஓடிக்களிக்கும்
அணில்கள் எழுப்பும் ஒலியும் சுற்றித் திரிகின்றன
மனிதனின் கூச்சலற்ற தெருவில் சுதந்திரமாக!

சப்தத்தை விழுங்கியபடி நெடியதாய் நீள்கின்றன
கால்களற்ற தெருவின் மீது ஊர்ந்து படரும் பொழுதுகள்…

 

கவிதை எண் : 2 – சரண்யா முசிலா (விதைகள் மாணவர் – காற்று)

கால்களற்ற தெருவினிலே

கால்களற்ற தெருவினிலே காகிதம் ஒன்று மிதந்துவரும்
காவலற்ற மனிதர்களின் மரணத்தை ஏந்திவரும்
காரணமே இல்லையென்றாலும் காவுவாங்க ஓடிவரும்

கண்ணீரை இரைத்தாலும்
கண்ணிரண்டைக் கொடுத்தாலும்
கண்ணனவன் வரவில்லையே
கருணைதன்னைத் தரவில்லையே

தனிமையிலே வாடுவோரைக் காணாது தவிக்குதம்மா மனமிங்கே தவிக்குதம்மா
தர்மமென்று சொன்னவர்கள் எங்கேதான் சென்றாரம்மா
தர்மதேவன் கோவிலையும் தாழிட்டு விட்டாரம்மா

கால்களற்ற தெருவினிலே கரோனாவின் தாண்டவமே
காய்ச்சலென்று சொன்னால்கூட மனதினிலே போர்க்களம்
காலனின் உருவாகி வந்திருக்கும் கிருமியே
காயம்பட்ட என்னைமட்டும் உன்னுடனே அழைத்துச் செல்வாய்
எல்லோரையும் விட்டுவிடு, வராய் நாம் செல்வோம் மேலே
வாராய்… நாம் செல்வோம் மேலே…

 

கவிதை எண் : 3 – சரஸ் வேல்

கால்களற்ற தெரு
சித்திரைத் திங்கள் பிறந்தது!
ஏனோ பலரின் சுடர்முகங்கள் மங்கியே கிடக்குது!
கலை கட்டும்! இம்மாதங்களில் நிகழ்ச்சி!
இல்லாமல் போனதால் உள்ளத்தில் பெரும் அயர்ச்சி!

ரெக்கை கட்டியே பறந்த கடிகாரங்களின் வேகத்தை . . .
குறைத்து விட்டன சர்வாந்தர்மயியான கொரோனாக்கள்!
வீடடங்கியது ஒரு வாரமே முடிவுற்ற நிலையில் . . .
யுகங்கள் பல ஆனதென்னவோ நம் நினைவில்!

பிள்ளைகளற்ற விளையாட்டுத் திடல்களும் . . .
மாணவர்களற்ற பள்ளிக்கூடங்களும் . . .
கால்களற்ற தெருக்களும் . . .
உற்சாகமற்ற மனங்களும் என கழிகின்றன நம் நாட்களும்!

மீள்வோம்! இந்த மாயக் குகைக்குள்ளிருந்து!
ஒற்றுமை என்னும் தேசத்தின் வழியில் . . .
வெகு தூரமில்லை! மூடு பல்லக்கில் இருக்கும்
தீர்வுநங்கை வெளிப்படும் சூழல்!

 

கவிதை எண் : 4 – ராஜி ஸ்ரீநிவாசன்

மனிதம் நடமாட வேண்டி இருப்பதால் மனிதர்கள் நடமாட்டம் குறைத்தனர்!
உலக இருளெல்லாம் ஒன்றாய்த் திரண்டு நச்சுப் புள்ளியாய் அப்பியதால்–
ஒன்றன் பின் ஒன்றாக தசாவதாரமல்ல, ஒரே சமயத்தில் பல்லாவதாரமாக
வெள்ளுடையும் கவசமும் அணிந்து நம்முயிரைக் காக்க நம்மிடமே கெஞ்சிப் போராடும்–
தம்முயிரையேப் பணயம் வைக்கும் அத்தெய்வங்களுக்கும்– பிறிதோருயிர் காக்கவேனும்,
தம்முயிரும் தேவையையாயிருப்பதால்–மனித பாதங்கள் பதியா நீள் பாதைகள் அவசியம்!
மொழிகளும் மதங்களும் இனங்களும் உடைக்க மறுத்த தளைகளை
மூச்சிற்குள் உட்புகுந்த தனியொரு அரக்கன் நொறுக்கி விட்டான்!
வெறும் குரூரத்திற்கா அப்பெருமை என துடிதுடித்த தேவதூதர்கள்
வெள்ளுடை தேவ தேவர்களிலும் காவலரிலும் ஆவிர்பவித்து
வைகுண்டவாசனோ ஜெருசலேம் நேசனோ மெக்காவின் சக்தியோ எல்லைக் காவல் பிடாரியோவென
ஒன்றாகிப் பலவாகி பல்லுயிராய் பல்கிப் பெருகியதால்
இல்லங்களுக்குள் இருத்தலை இறையே முன்னின்று நடத்துவதால்–
கால்களற்ற வீதிகளின் விளிம்புகளில் துயின்றோரும் செங்கற்களின் கூடுகளில்!
பசி வேண்டி மருந்துண்டவரும் பசியாமை வேண்டித் துடித்தவரும் அவரை மிதித்தவரும்
பாதம் படியா வீதிகளால் இன்று ஒரே நேர் கோட்டில்!

 

கவிதை எண் : 5 – தங்க.வேல்முருகன்

கால்களற்ற தெரு
குழந்தைப் பருவத்தில் ஓடிஆடி விளையாடிய
பள்ளிப்பருவத்தில் நண்பர்களுடன் நடந்து சென்ற
விழாக் காலங்களில் காதலர்கள் கண்டுமகிழ்ந்த
இரு சக்கர ஊர்திகளில்சுற்றித் திரிந்த
ஆடியும் பாடியும்களித்த
இடங்களுக்கெல்லாம் செல்லமுடியாமல்
உயிர் பயத்தில் முடங்கியும் மருத்துவமனையில்
அடங்கியும் கிடக்கிறது உலகம்.
கொடூரக் கொரோனாவால் பிறப்பிற்கும்
இறப்பிற்கும் இல்லை கூட்டம் – விண்ணுலகம்
சென்றோரை நினைத்து புலம்பிகொண்டும்
பிறந்த இடத்து தெருவில் கால்பதிக்கமுடியுமா
என்ற ஏக்கத்திலும் அல்லல்படுவது
கால்கள் மட்டுமல்ல
அயல்நாட்டில் முடங்கிக்கிடக்கும் எம் வாழ்வும்தான்.

கவிதை எண் : 6 – நாகூர் அனீஸ் அகமது

கால்களற்றத் தெரு

சுதந்திரமாக நடந்த கால்கள்
இன்று சுருட்டி வைக்கப்பட்டுள்ளன!
சும்மா இருப்பது சுகமில்லை என்பதைப் புரியவைத்துள்ளது.
உழைக்கும் நேரங்களெல்லாம்
ஊரடங்கு உத்தரவில்!
சுவாசிக்கும் காற்றுக்கும் கவசம்!
சுத்தமாய் இல்லையெனில்
நின்றிடலாம் நம் மூச்சு!
காலம் செல்லச்செல்ல
காலன் வேட்டை
தொடர்கின்றன!
பணி இல்லை.
சானிடைசர்,முகக்கவசம்
விலையுயர்வு!
24 மணிநேர கடைகள்
இரவுபகல் வாகனங்கள்
எந்திரத்தொழிலகங்கள்
கப்பல்கூடம், கட்டுமானம் எல்லாம் ஓய்வில் அமர,
கொல்லும் கோவிட்டை
கொன்றொழிக்க
ஒட்டுமொத்த உலகும்
கிளம்பி விடக்
கண்ணில் தெரிவதெல்லாம்
கால்களற்றத் தெரு!!.

கவிதை எண் : 7 – நூர்ஜஹான் சுலைமான்

 

எண் சுமந்த வாகை மரத்தின் இலைகளில் சொட்டிய பின் பனிக்கால நீரை

பேனா நிப் அலகுகளால் உறிஞ்ச்சும் தவிட்டுக் குருவிகள்

பிச்சிப்பூவின் சொட்டுத் தேனுக்காக

கொத்தில் ஒற்றை பூவை விழுங்கிச் சுவைக்கும் தேன்சிட்டுகள்

 

உதிர்ந்த செம்பருத்தி மகரந்தங்களை இழுத்துச்செல்லும் எறும்புகளை இரையாக்கக்

காத்திருக்கும் சில்வண்டுகளை விருந்தாக்க தத்திவரும் மைனாக்கள்

நேற்றிரவு எவரோ வீசிய எஞ்சிய மாமிச எலும்பின் ம்ஜ்ஜையை தன் அலகுகளால்

எவர் தொந்தரவுமின்றி மரக்கிளையில் அமர்ந்து தோண்டிக் கொண்டிருக்கும் காகம்

கல்வீச்சோ காயமோ இன்றி காலாற நடைபயிலும் தெருநாய்

மீட்டருக்கு மேல் பணம் தராத பயணிக்கு தன்

ஓட்டுநர் தருகின்ற திருநாமங்களை மனதுள் அசைபோட்டபடி

தகர கொட்டகைக்குள் சயனம் கொண்டுள்ள ஆட்டோக்கள்

என்று தன் இயற்கை சுகத்தை சுகித்தபடி

விழிகள் திறந்து தன்னைப் படைத்தவனைக் காணதவம் கிடக்கிறது

கால்களற்ற தெரு!

 

கவிதை எண் : 8 – தியாக இரமேஷ்

கால்களற்ற தெரு. 

காலங்காலமாகக் கால்களால் மிதிவாங்கிப் பழக்கப்பட்ட

அந்த அகன்ற பழுப்பு, கருப்பு கோடுகள்

இன்று தன்மீது கால் நடைகள் 

 நடப்பதைப் பார்த்து வியந்தன

 

காலத்தின் கட்டாயத்தால்

கால்களின் மனம் முடமாக்கப்பட்டு

வீட்டில் முடங்கின

 

பல சொந்த ஊர் நோக்கி

தடைகளையும் தாண்டி தொடந்து நடந்தன

சில கால்கள் மரித்தும் போயின

 

வாசல் தாண்டாதக் கால்களால்

வீடெங்கும் பாசமும் அன்பும் நிரம்பி

வீதிகளிலும் வழிந்தோடியது

 

படி தாண்டாக் கால்கள்

தெருவைப் பார்த்து வெறித்தது

 

கவிதை எண் : 9 – இரா. அருள்ராஜ்

கால்களற்ற தெரு
கடுங்குளிரின் கொடுவெய்யிலின் தட்பவெட்பத் தகிப்பு
அடர்மழைக்கும் சூறைக்காற்றுக்கும் பிந்திய நசநசப்பு
இருகால் விலங்குகளிட்டுக் காய்ந்த மலமிச்சம்
காற்று கையொப்பமிட்ட பூவுதிரிகளின் எச்சம்
புறம்பேசிகளிடத்துப் பிரிந்து விழுந்த சொற்குவியல்கள்
இளமையும் முதுமையும் செதுக்கியச் சுவடுகள்
விரவிக் கிடக்கும் இளசுகளிட்டக் காதலம்புகள்
காற்றால் களவாடப்பட்டப் புழுதிகளின் புலம்பல்கள்
விழாக்காலங்களில் உதிர்ந்திட்ட பறை இரைச்சல்கள்
சவஊர்வலக் காலடிகளின் வடுக்களிட்டப் பள்ளங்கள்
சாதிமத வீணர்களின் மோதலெச்ச ரத்தத்துளிகள்
கொடுஞ்சாம இரவின் பிளிரும் இடுகாட்டாமைதி
இவ்வாறென… திரிபுகளின் மொத்த உருவகமாய்
மனக்குமுறல்களை மறக்கநினைக்கும் காலப்பெருவெளி
எத்தனையெத்தனையோ கால்தடங்கள் என்மீது கடந்தாலும்
காலங்களைக் கடக்கத்துடிக்கும் “கால்களற்ற தெரு” நான்!!!

கவிதை எண் : 10 – இராம.தியாகராஜன்

காதல் தரிசனம்

கருங்குயில் கானம்பாட,
கார்கூந்தல் அதிலாட,
ஒத்தமுடி பறந்துவந்து,
உன்வரவச் சொல்லுதடி!.

கானமயில் வனத்திலாட,
கனமழையும் வந்திறங்க,
கன்னிநீயும் நனைந்துநிற்க,
காதல்இங்கு பெருகுதடி!.

கருவேலங் காட்டுக்குள்ளே,
கலங்கிநின்னே மானைப்போல,
உருவங்கண்டு கட்டியனைக்க
உள்ளந்தான் உருகுதடி!.

கால்களற்ற தெருக்கோடியில்
காலத்தின் கட்டாயத்தில்
கவச மணிந்து காத்திருக்கேன்
வருவாயா, தரிசனம் தருவாயா!?.

கவிதை எண் : 11 – லலிதாசுந்தர்

கால்களற்ற தெரு

சருகுகள் காற்றில் அசையும் சத்தம் கேட்டு
இரைதேட சென்ற இரண்டு எறும்புகள்
சற்று இளைப்பாறி நின்றன.
ஆள்ரவமற்ற வீதியில்
எதற்கு இத்தனை அவசரம்
இது நமக்கான உலகம்
என்று எக்களித்த எறும்பை
எச்சரித்தது மற்றொன்று
உன் பிடிக்குள் ஆணவம் இருக்கும்வரை
நீ தனித்துவமானவன்…
ஆணவத்தின் பிடிக்குள் நீயிருந்தால்
நீ தனித்துவிடபட்டவன்…
எல்லைமீறல் என்றுமே
ஆபத்தென்றது.

கவிதை எண் : 12 – முத்து சுவேதா (விதைகள் மாணவர் – நிலம்)

கால்களற்ற தெரு

நூறாயிரம் கால்கள் தவழ்ந்த உன்னில்
நுண்ணுயிரால் கால்களற்ற தெருவானாய்

அனாதை குழந்தை தவழ்ந்த உன்னில்
அளக்க ஆள் இல்லா அனாதை ஆனாய்

தலைக்கவசம் உருண்டோடின உன்னில்
உடல்களை தாங்க வழியில்லாமல் உருகினாய்

காக்கிச்சட்டை அணிவகுக்கும் உன்னில்
கைகொடுத்து களிக்க முடியா கானாலானாய்

யாசகம் வேண்டி மழலைகள் உன்னில்
வாரியணைக்க வழியில்லாமல் வாடினாய்

இணைந்த கைகளாய் நகரங்கள் உன்னில்
ஊன்றுகோல் வேண்டி கால்களற்ற தெருவானாய்

உருவமில்லா தெய்வங்கள் உலா வந்தன உன்னில்
உயிர்காக்கும் தெய்வங்களை கையில்தாங்க

உங்கள் கால்களுக்காக காத்திருக்கும் கால்களற்ற தெரு

கவிதை எண் : 13 – பிரியா சியாம்

கால்களற்ற தெரு

புல்லாக, நெருஞ்சி முள்ளாகக் கிடந்து
பல்லால் பாதங்களைப் பதம் பார்த்தேன்

ஒத்தையடிப் பாதையாய்ப் பிறந்த நான்
கால்களால் பக்குவப்பட்டுத் தெருவாய் வளர்ந்தேன்

மெய்யாய் என் மீது விழுந்தழுத குழந்தைக்காக
பொய்யாய் என்னை அடிக்கும் அன்னையுமில்லை

மூத்தோரின் மூன்றாவது காலோசையும் கேட்கவில்லை
காப்போரின் கால்கள் மட்டும் அங்குமிங்கும்.

உடல்தெருக்கள் அணிவதற்கு காலுடைகளின்றி
கைச்சந்துகள் மூளியாய் ஒரு காலணியுமின்றி

சந்திக்கும் தெருவெல்லாம் கேட்டு விட்டேன்
சத்தமின்றி அடங்கி முடங்கிக் கிடக்கின்றன

குழவிகள் விளையாடிய இடங்களில் குளவிக்கூடுகள்
ஆறுதலாய் ஜீவராசிகள் மீண்டும் வருகின்றன

கால்களற்ற காலமும் கடந்து போகும்
காத்திருக்கிறேன் கால்களுக்காக கண்ணீருடன்

கவிதை எண் : 14 – சியாம் குமார்

கால்களற்ற தெரு

மிதியாதார் தலை வாசல், மதித்து நோக்குகிறேன்
மிதியற்ற என் மெய்க்கு வலிமிகுமிடம் இதுவே!!

தத்தி நடை பழகும் தளிர்க்கால்கள்
தாவிப் பள்ளி செல்லும் இளங்கால்கள்

நடைப் பயிற்சி செய்யும் வேகக்கால்கள்
குடை கொண்டு நடக்கும் விவேகக்கால்கள்

இணைந்து உரசிச் சூடேற்றும் காதல் கால்கள்
குனிந்து, ஊன்று கோலுடன் முதுமைக்கால்கள்

வேலைக்குச் செல்லும் வீறுநடைக் கால்கள்
நாளையை எண்ணி நடக்கும் கனவுக்கால்கள்

குழப்பக்கால்கள், குதூகலக் கால்களேன அனைத்தும்
கலக்கத்துடன் வீட்டிற்குள் முடங்கியது ஏனோ?

காலத்தின் கொடுமையால் கால்களின்றி வெறுமையானேன்
எக்காலத்திலும் வரக்கூடாத ஊழ்வினையின் தொகையிது.

அப்படியே, மீண்டு மீண்டும் மிதிக்க வாருங்கள்!!!
இப்படிக்கு, கால்நீட்டிக் கெஞ்சும் கால்களற்ற தெரு

கவிதை எண் : 15 – ஸ்ரீநிதி (விதைகள் மாணவர்)

கால்களற்ற தெரு
வண்ணமயமான உலகம் இருண்டது
உண்மையான சந்தோஷம் பொங்கியது
தெருக்களின் ஆட்சி விலங்குகளுக்கு கைமாறியது
பறவைகளின் மேடையானது தெருக்கள்!
காவல் தெய்வமாக நிற்கும் காவலர்கள்
தன்னலமற்ற சேவையை உணர்த்தும் துப்புரவாளர்கள்.
உணர்த்திய பாடம் வெகுமதியானது!
காகங்களின் சந்தோஷம் புரிந்தது.
மூன்று வேளையும் கூடி உண்ணும்போது!
தலைமுறை இடைவெளியின் வீரியம் குறைந்தது

கவிதை எண் : 16 – இரா சத்திக்கண்ணன்

கால்களற்ற தெரு
கனவில்
இந்த தெருவில்
விளையாடிய நினைவுகள்

இந்த தெருவில்
அன்பு நிறைந்த காற்று
உலவுகிறது
அறம் கலந்த வாசம்
நிறைந்திருக்கிறது

இரத்தவாடை இருந்ததில்லை
ஆகையால் வன்மம் இல்லையென்பேன்
அரசியல் இருந்ததேயில்லை
ஆகையால் அடிமைகள் இல்லையென்பேன்

ஆக
நிச்சயம்
கால்களற்ற தெரு
இதுவாகத்தானிருக்கும்!

கவிதை எண் : 17 – பழ.மோகன்

கால்களற்ற தெரு..

மனிதக் கால்களற்ற தெருவெங்கும்
பனித்துளி மகுடம் சூடிய
பச்சைப் புற்களின் அரசாங்கம்.!

விளையாடச் சிறுவர்களின்றி
வெறிச்சோடிய வீதிகளில்
சிறகடிக்கின்றன சில பட்டாம்பூச்சிகள்.!

பாதங்கள் பதிந்து பதிந்து
புழுதி படிந்திருந்த பாதையில்
முதன்முதலாய்ப் பூக்கிறது
சொந்த நிறத்தில் ஒரு தும்பைப்பூ.!

எந்திரங்களின் இரைச்சலற்ற காலை –
வேளைகளில் செவிக்கு இதமாகின்றன
பறவைகளின் கீச்சொலிகள்.!

பிறவுயிர்களைப் பிழைக்கச் செய்து
கண்ணுக்கு அழகாகத்தான் –
காட்சியளிக்கிறது கால்களற்ற தெருவும்..

கவிதை எண் : 18 – தேன்மொழி அசோக்

கால்களற்ற தெரு
இரு சங்கிலிகளற்ற ஊஞ்சலாய் இந்தக்
கால்களற்ற தெருவில் நடக்கிறேன்
சேர்த்துவைத்த நினைவுத் துகள்களை
ஆங்காங்கே சிதறவிட்டு…..

கூட்டமாக விளையாடிய தினங்களை
அடகு வைத்து விட்டு,மீட்க முடியாமலும்!
அலைமோதும் கூட்டத்தில் உன் தலை
தேடிய தருணத்தின் துடிப்பிலும்!
இயற்கையே ஏவிய இருமல் தும்மலும்
உயிரைக் கொல்லுமோ என்ற பீதியிலும்!
ஒவ்வொரு வினாடியும் உடையும் என்னை
சமூக நலனுக்காக தனிமைப்படுத்தி
பேச்சும் மூச்சும் அடங்கிப்போச்சு முகக்கவசத்துக்குள்ள!
ஊரடங்கு உத்தரவால் உலகே அடங்கினாலும்
என்னுள்ளம் அடங்கவில்லை நாலு செவுத்துக்குள்ள!

கவிதை எண் : 19 – பிரபு பாலா

கால்களற்ற தெரு

வானேறி மதிமண் மீதடிவைத்த மனிதன்
தானேறிய தெருவிலடி வைக்கத் தடுத்து
வீடேறிய கதிக்கு விடைநீயென உணர்த்தி
நானேறிய மதிமடை திறந்து இறைவாவென
அழைக்க வைத்த முதலோன் உமக்கு
இழைத்த வல்வினை வருந்திப் பணிந்திடும்
தெளிந்த மனதுருகி அழைத்திட வருவாயோ…
குளிர்ந்த மறுகுணத்தொடு உபாயம் தருவாயோ…
யாதும் எனக்கென தழைத்த ஆணவமழித்து
யாவரும் ஒன்றென உணரமாயத் தோலுரித்தாய்
வல்லவன் யாரும் உமக்குக்கடுகே நிலைத்த
எல்லவன் உன்னவன் தன்வழி தோன்றிய
பிள்ளை யாமழைத்த கூற்றை யழித்த
நல்ல தகப்பனாய் நீரருள திருத்தாழ்
வணங்கித் துதிப்போம் உமதருமை உளம்
இணங்கி மீளச்செய் பெரியோன் இறையே!

கவிதை எண் : 20 – ஜோசப் சேவியர்

கால்களற்ற தெரு
இப்பொழுதெல்லாம் பூங்காக்களிலோ
அடுக்குமாடிக் குடியிருப்பின் ஆள் அரவமற்ற
இருளில் கரையும் மூலைகளிலோ யாரையோ
யாருக்கோ நினைவுப்படுத்தவே இயங்காமல்
காத்திருக்கிறதோ இரண்டாவது ஊஞ்சல் !

ஒவ்வொருமுறையும் ஊஞ்சல் முன்னும் பின்னும்
கடக்கும்போது காதோரம் கிசுகிசுத்து
யாருடைய நினைவுகளோ சுமந்து பேசிச்
சிரிக்கிறதோ அந்த இரண்டாவது ஊஞ்சல் !

சாயங்கால வேளைகளிலோ சலனமற்ற முன்னிரவுப்
பொழுதுகளிலோ கால்களற்றத் தெருக்களை
முகக்கவசமணிந்துக் கடக்கும் தருணங்களில்
காணத்தவறியதில்லை ஊஞ்சலில் விழிகள் மூடிக்
கண்ணீர் திண்ணும் காதலிகளையும்,
நினைவுச்சுமையால் இயங்காமல் தவிக்கும்
அந்த இரண்டாவது ஊஞ்சலையும் !

கவிதை எண் : 21 – முஹைதீன்

கால்களற்றத் தெரு

வெறிச்சோடிக் கிடக்கின்றன தெருக்கள்
வெளிச்சத்தைத் தேடுகின்றன மனங்கள்
பாதைகளை அலங்கரித்தச் சுவடுகள்
பாரங்களைத் தவிர்க்க முடங்கிவிட்டன
நாளைகள் நோக்கி அடங்கும் விழிகளில்
நாளும் பீதிகள் அமைதியை முடுக்கிவிட்டன
இயற்கையோடு கை கோர்த்து நாட்களாயிற்று
இல்லமே அடைக்கலம் என்று வாழ்க்கையாயிற்று
நானும் நீயும் அவர்களுமற்ற இந்தத் தெருக்கள்
நாளுக்கு நாள் தனிமையைச் சொல்லி அழுகின்றன
உலகம் மீண்டு வரும் என்ற நம்பிக்கை அலைகள் மட்டுமே
உன்னிலும் என்னிலும் அவர்களிலும் நித்தம் எழுகின்றன
அலங்கார மழையாய் உன்னை
மீண்டும் நனைக்க விரும்புகின்றோம்
அழியாத நினைவுகளைத் தந்துவிடு
உன்னிடம் மகிழ்வோடு திரும்புகின்றோம்

கவிதை எண் : 22 – ச. மோகனப்பிரியா

கால்களற்ற தெரு!

நடமாட்டமற்ற தெரு
கோழிப்பொங்கின் இறகெனக்
காற்றின் மேல் மேவிடுகிறது.
அசைவுகளற்ற கதவோரங்களில் தோன்றும்
கரையான் புற்றுகளென வீற்றிருக்கும் வீடுகளினுள்
கண்ணுறும் கரிய உருவங்கள்
முகக்கவசமற்ற வெளியில்
உலாவும் நாளுக்காக
உறங்காமல் இதயத்தைப் பிடித்தபடி
கதவுகளைச் சாத்தி மறுகுகின்றனர்.
மரண ஓலமிட்டு ஓடும்
அவசர ஊர்திகளின் பின்னால் ஓடிக்களைக்கும்
அனாதை நாய்களின் ஒட்டிய வயிற்றில்
புழுதியையும் அவ்வப்போது பிணங்களையும்
வடியவிட்டு நகர்கிறது
மனிதக் கால்களற்ற தெரு..!

கவிதை எண் : 23 – சீர்காழி உ செல்வராஜு
கால்களற்ற தெரு

ஏ…மானுடா ….நீ செய்த அனைத்தையும்
பார்த்து பார்த்து சகித்துக் கொண்டிருந்தேன்!
ஒருவருக்கொருவர் கீழ்ப்படியாமல் எத்தனை பூசல்கள்?
கட்ட பஞ்சாயத்துப் பேர்வழிகள் வெட்டுக்குத்துச் சமூக விரோதிகள்!
பாலியல் வன்கொடுமை காமுகர்கள் அதிதீவிர குடிமகன்கள்!
அரசியல் ஆரவார கரைவேட்டிக் கும்பல்கள் ஊழல் பேர்வழிகள்!
அப்பப்பா… இப்போதுதான் எனக்குச்சற்று நிம்மதி!
இப்போதாவது யோசிப்பாயா எத்தனை தூரம் விலகிவிட்டோம் என?
சாலையோரங்களில் விளையாடிச்செல்லும் கள்ளம் கடமற்ற குழந்தைகள்
நடந்து செல்லும்போது நான் பெற்ற மகிழ்ச்சி வேறு எதுவாக இருக்கமுடியும்?
வீட்டுநடப்பையும் நாட்டுநடப்பையும் பேசி நடமாடிய முதியவர்கள் எங்கே?
என் இருபுறங்களிலும் அசுத்தப்படுத்தினீர்கள் ஆனால் இப்போதோ
வரிந்துகட்டிகொண்டு குப்பைகளைச் சுத்தம் செய்கிறீர்கள்!
பார்த்தாயா கண்ணுக்குத் தெரியாத கிருமி உலகையே புரட்டிப்போட்டுவிட்டது?
இயற்கைக்கு எதிராக செயல்பட்டதன் பின்விளைவு?
கால்களற்ற தெருவாக சுத்தமாக காட்சியளிக்கின்றேன்!

கவிதை எண் : 24 – நா.துரைகுமார்

கால்களற்ற தெரு

கால்களற்ற தெரு எழுந்து நடக்குமா?
நெடுந்தொலைவு பயணங்கள் யாவும்
நிலுவையில் வைக்கப்பட்டாலும் தொலைத்தொடர்பு
நெஞ்சினிக்கும் உறவு பாலம் தொடர் பயணம்.

அத்தியாவசிய தேவைகளுக்கு அளந்து நடக்கும்
பாதைகள் அன்பால் அரவணைத்துக்
கொடுத்த முத்தமெல்லாம்
அழகு இதழ்களை மறைத்துக் கொண்டது கவசம்.

மூச்சுக் காற்றில் தோற்றுப் போவோமா?
மூத்தோரை நெருங்க முடியாத
முகத்திரை தான் வேண்டுமெனில்
நொறுங்கிப் போகும் மனது.

நூதன முறையில் நுண்ணுயிர் கிருமியொன்று
நுரையீரலைத் தாக்குமாம் நூற்றுக்
கணக்கானோர் மரணப் படுக்கையில்
நடமாடுமாடும் கால்கள் தடுமாறும் தெருக்களில்.

கவிதை எண் : 25 – பா கங்கா

கால்களற்ற தெரு

பரபரப்பாகவே ஓடும் மக்களால் நாளும் நிறைந்திருந்திருக்கும் அத்தெரு
வழிதோறும் பூத்துக் குலுங்கும் பூக்கள்
படபடவென பறந்து திரியும் பறவைகள்
கலகலவென சிரித்து மகிழும் சிறுமியர்
குதிகால் செருப்பதிர குதித்துச் செல்லும் யுவதிகள்
பரபரவென அலுவலகச் செல்லும்
இளைஞர்கள்
தள்ளாடித் தள்ளாடி நடந்து செல்லும்
தாத்தா பாட்டிகள் என இவர்களின்
காலடிப் பற்றி ஊர் சுற்றி வந்தது
வெறிச் சென்று மாறிய ஒரு நொடியில்
இன்பங்களனைத்தும் தொலைத்த
கால்களற்ற அத்தெரு தன் கையறுநிலையைச் சபித்து
நின்றது அனாதையாய்!

கவிதை எண் : 26 – நிர்மல்

கால்களற்ற தெரு

தேவதைகள் நடமாடும் தெரு
தேனிகள் மலராடும் தெரு
தேர்கள் வடமிடும் தெரு
தேடல் தொலைந்திடும் தெரு

வண்ணமீன்கள் வளைந்தோடும் தெரு
வட்டநிலா வந்தாடும் தெரு
வண்டுகள் விளையாடும் தெரு
வசீகரமின்னல் மின்னிடும் தெரு

காலங்களற்ற தெரு
காதலுற்ற தெரு
காவலற்ற தெரு
காவியங்களாகும் தெரு

கவிதை எண் : 27 – அ. பிரபா தேவி

கால்களற்ற தெரு

மணற்றுகளை மினுக்குகளாய் ஒட்டிய
தரைச்சேலை உடுத்திய தெருநங்கை
அடுத்தத்தெரு காண ஆவலுற்றாள்.
வெறிச்சோடிக் கிடந்தது அதுவும்.

ஆளரவமற்ற அலிபாபாக் குகையாய்
தனிமைக் கொடூரிகள் மிரட்டின.
விலகு விலகென்ற எதிரொலிகள்
விண்ணதிர வாணம் வெடித்தன.

காற்சுவடெனும் மாலைகளில்லாக்
கைம்பெண்ணாயொரு தெருநங்கை.
நெட்டித்தள்ளும் வேதனையில்
நிலைகுலைந்தனள் தெருநங்கை.

தன்வீடு திரும்பிட எத்தனிக்கையில்
தன்வீடு தனைச்சுமந்த நத்தையொன்று
தடையின்றி ஊர்ந்தது கண்டு இப்புவி
யாவர்க்குமானது என்று மகிழ்ந்தனள்.!!!

கவிதை எண் : 28 – முத்தழகு மெய்யப்பன்

கால்களற்ற தெரு

அன்பு, அறிவு, அமைதி, பண்பு, பாசம், தியாகம், தொண்டு
ஆன்மீகம், இன்பம், துன்பம், வாழ்வு, தாழ்வு, வீரம், அச்சம்
இறையருள், இலகுத்தன்மை, பக்தி, நெறி, தவம், நேர்மை, தூய்மை
ஈகை, இரக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பணிவு, துணிவு, நேர்மை
உதவுதல், உண்மை கூறல், விட்டுக் கொடுத்தல், விதிமீரல், நன்மை, தீமை
ஊக்கம், ஆக்கம், கடமை, கண்ணியம், கட்டுபாடு, ஒழுக்கம் இன்மை
எதிர்ப்பு, எள்ளுதல், எதிர்வாதம், கோள்மூட்டல், கோபம், அமைதி
ஏற்றம், ஏமாற்றம், கொடை, கஞ்சத்தனம், காட்டிக் கொடுத்தல், பண ஆசை
ஐயம் கொளல், அதிகம் பேசுதல், கொடுமை செய்தல், கடுமை, மடமைசெய்தல்
ஒழுக்கம், ஓயா உழைப்பு, விட்டுக் கொடுத்தல், கட்டிக் காத்தல், கடமையாற்றல்
ஒளவியம் பேசல், அடங்காது இருத்தல், பேராசை, பொறாமை, சுயநலம்
அஃதான அத்தனையும் பெற்ற மானிட சமுத்திரமே மாற்று வழியின்றி
சத்தமின்றி சலனமின்றி சஞ்சல நெஞ்சை வாட்டி வருத்தி வழியறியாமல்
நித்தம் வீட்டில் கால்களை நீட்டிப் மல்லாக்க படுத்த வாறே
“அடக்கி இனியெப்படி வாசிப்ப” தென ஆழ்ந்து ஆராய்ச்சி செய்கையில்
“கால்கள் அற்ற தெருக்களே” உங்களால் மட்டும் நடக்கவா முடியும்?

கவிதை எண் : 29 – ஜெ ஜெயக்குமார்

கால்களற்ற தெரு

புரியாத புதிர்களாய் எண்ணிக்கைகள் உயர உயர
இருதயத்தை இடம் நகர்த்தி பறையடிக்கின்றன
விடையில்லா கேள்விகள்…

வீட்டு டப்பாகளில் இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கும்
கதிர்மணிகளும் காய்ந்த பருப்புகளுமே
எவர் வெற்றியையும் உறுதி செய்யாமல்
இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றன
நுரையீரலுக்கும் வயிற்றுக்கும் நடக்கும் போரை…

நகராத நாள்களின் அடங்காத தனிமையில்
மரித்துகொண்டிருக்கிறான் காலனின் கைக்கூலி
கால்களற்ற தெருக்களில் அமைதியாக நடந்துகொண்டிருக்கிறது
அவனின் இறுதிச் சடங்கு…

விடியும் ஒவ்வொரு இருளுக்குள்ளும்
புதிதாய் ஓர் உலகம் பூக்கும் நம்பிக்கையில்
நேர்மறை மனிதர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்
எதிர்மறை முடிவுகளை நோக்கி…..

கவிதை எண் : 30 – த.அன்புச்செல்வி

கால்களற்ற தெரு

கண்ணில் தென்படாத கொரோனா
சாதிமத பேதமின்றி
ஏற்றத்தாழ்வு பாராமல்
ஏழையோ பணக்காரனோ
அனைவரையும் அடக்கி
வீட்டிற்க்குள் முடக்கி
தெருக்கள் நிசப்தமாக
சுவாசிக்கும் காற்று
சுத்தமான காற்றாக
இயற்கையின் இயல்பை
அனைவருக்கும் ஆணித்தரமாக
உருக்கமாக உணர்த்தி
அகிலத்தேயே அதிர்ச்சி
அலையில் மூழ்கடிக்கிறது-இந்த
கொரொனா சுனாமி
ஓய்ந்த பிறகாவது
மனிதநேயம் மறுபிறவியெடுக்க
மனமார வேண்டுகிறேன்.

கவிதை எண் : 31 – சித்ரா ரமேஷ்

கால்களற்ற தெரு

கால்களற்ற தெருவில் கவிதை மட்டும்
தனியே தவிக்கிறது
யாருமற்ற தனிமையில் துயரங்களுடன் நடந்து
அதற்குப் பழக்கமில்லை
கைத்தட்டல்கள், பொன்னாடைகள், புகழாரங்கள்
புதுப் புத்தக வாசனையுடன்
புன்னகைகளுக்கு இடையே
மேடையேறி அரங்கேறும்
உற்றாரும் உறவினரும்
மற்றாங்கே நண்பர்களுடன்
இணைந்து நடந்த கால்களும்
கவிதைகளும்
பாலையாய் விரிந்த சாலைகளில்
பகல் நிலவாய்
ஒளியிழந்து நிற்கிறது!!

கவிதை எண் : 32 – த.அழகுராஜன்

கால்களற்ற தெரு

மூச்சிரைக்கும் ஓட்டத்தின் முடிவில்
எதையும் அடையவில்லை;
வெளிப்புற பயணங்கள்-என்னை
ஒருபோதும் நகர்த்தவில்லை;
வெறிபிடித்த எங்கள் நம்பிக்கைகள்..!
வேரோடு சாய்ந்துகிடக்கின்றன:
இப்படியொரு நாள் அவசியமென்று-
முன்னெப்போதும் தோன்றியதில்லை:
ஊழ் வினையும்,நியூட்டனின் விதியும்
கால்களற்ற எங்கள் தெருக்களில்..
கட்டாய இடைவெளியை கடைபிடிக்கின்றன:
போதிமரத்து நிழல் படிந்து கிடக்கும்
எங்கள் தெருக்களில்..
இனி பேரன்பே பூக்கும்..

கவிதை எண் : 33 – த. அருமைச் சந்திரன்

கால்களற்ற தெரு

ஊரடங்கு உலக உருண்டையை
உல்டாவாக சுற்றி இருந்தது

கஜா புயல் வெள்ளத்தில் கூட
கால்நடை வந்த கஜேந்திரனை
காணவில்லை

தான் நடக்காவிட்டாலும்
நாய்க்கு நடை பழக்கும் நரேன்
நாட்டிலேயே இல்லையாம்

வீதி வரை வரிசை கட்டும்
விஜய் கிளினிக்
வெரிச்சோடி கிடக்கிறது.

ஒத்த வியாதியில்
மொத்த வியாதியும்
ஓடி ஒளிந்தே விட்டது.

காதை கிழிக்கும் வாகன சத்தம்
காலராவார்டு போல் காணாமல்
போய் விட்டது.

சிறுசுகள் ஒதுங்கும் சிறுவர் பூங்கா
சீண்டுவாரின்றி
சீல் வைத்திருக்கிறது

ஜன்னலுக்கு பின்னே
இருஜோடி கண்களோடு புதைந்து கொண்டது மனித இனம்

ஆனால்
ஆனால் என்ன?

கார்பன் இல்லாத காலை காற்று மூக்கை துளைத்து போனது
முதல் முறையாய்

கொம்பை காட்டியே தப்பி பிழைத்த
கோமாதாக்கள்
குதூகலமாக வீதியில் திரிகின்றன.

அரண்டு ஓடும்
புள்ளிமான்கள் அங்குமிங்கும்
ஓடின அரவமற்ற
தெருக்களில்

இது கால்களற்ற தெரு
மனித
கால்களற்ற தெரு

கவிதை எண் : 34 – பானு சுரேஷ்

கால்களற்ற தெரு

அன்பின் இறக்கைகள் வெட்டப்பட்டு
தெறித்து விழுந்து தூசு படிந்த
தடங்களாகி போன பாதச்சுவடுகள்
நிறைத்தன தெருக்களை

இறகுகளின் நீட்சிகளாய் தவித்து அலைக்கழிக்கப்பட்ட நினைவுகளாகி
மனதில் உறைந்து போயின
அருகருகே அமர்ந்திருந்த கணங்கள்

கவசங்கள் ஆகிப்போன முகமூடியால்
தடை செய்யப்பட்ட முத்தங்கள்
தவிப்புகளாக உருமாற்றம் பெற்று
தனலாகி அடங்கின

கனவுகள் சுமக்கும் இதயங்கள்
எதிர்பாரா யுத்தத்தால் முடங்கிக்
கிடக்கின்றன ஆயுதமின்றி
மீண்டும் பறத்தல் சாத்தியமா?


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/kavimaalai/public_html/wp-includes/functions.php on line 4757