கவிஞர் யுகபாரதியுடன் கவிமாலை சந்திப்பு 255

0
1710

கவிமாலையின் 255-ஆவது மாதாந்திரச் சந்திப்பு நிகழ்ச்சி மெய்நிகர் வழியாக ஆகஸ்ட் 28ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர்க் கவிஞர்கள், கவிதை ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.  திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர்  யுகபாரதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்பித்தார்.   

“படித்ததில் பிடித்தது” அங்கத்தில் தெரிவுசெய்த யுகபாரதியின் கவிதைகளைக் கவிமாலைக் கவிஞர்கள் படைத்தனர்.  தலைவர் இன்பாவின் உரையில் மறைந்த சிங்கப்பூர் மரபுக் கலைஞர் ஆனந்தக் கண்ணன் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.  “கவியாடும் முன்றில்” என்ற தலைப்பில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் பகிரப்பட்ட கவிதைகள்  பற்றிய தனது பார்வையை முன்வைத்தார்  கவிஞர்  மா. அசோக்குமார்.  இம்மாதம் “அலை அலையாய்” எனும் தலைப்பில் வந்த போட்டிக்கவிதைகளின் விமர்சனத்தைத் தெளிவாகவும் கவிஞர்களின் படைப்புத்திறனை மேம்படுத்தும் வகையிலும் கவிஞர்  ராஜு ரமேஷ் எடுத்துரைத்தார்.  மேலும் மரபுக்கவிதைகளின் தேவையையும் அதற்காக கவிமாலை மேற்கொள்ளும் முன்னெடுப்புகளையும் சுட்டி இந்த மாதக் கவிதைகளுள் மூன்றில் ஒருபங்கு மரபுக்கவிதைகளின் வரவு மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார்.  

அதனைத் தொடர்ந்து போட்டிக்கவிதைகளைக் கவிஞர்கள் வாசித்தபின் போட்டியின் பரிசு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

 மரபுக்கவிதைக்கான முதல் பரிசினை கவிஞர் கி.கோவிந்தராசுக்கும் பொதுப்பிரிவில் முதல் பரிசு இரா அருள்ராஜுக்கும் வழங்கப்பட்டது. 

 நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் கவிஞர் யுகபாரதி “இன்றைய திரைப்படப் பாடல்களின் அழகியல் போக்குகள்” என்ற தலைப்பில்  சுமார் ஒரு மணி நேரம் சுவைபட தனது திரையனுபவங்களை விவரித்தார். சிங்கையில் மரபுக்கவிதைகளை ஊக்குவிக்கும் கவிமாலையின் செயலை வியந்து பாராட்டி, இது வருங்கால இளைய தலைமுறையினருக்குத்  தூண்டுகோலாக அமையுமென்று நம்பிக்கை தெரிவித்தார்.

கலப்பிசை வழியாக வந்த திரையிசையில் தொடங்கி  பாப நாசம் சிவன் மதுரகவி பாஸ்கரதாஸ் போன்ற

ஆகச்சிறந்த திரைப்படப் பாடலாசிரியர்கள் திரையிசையை வடிவமைத்ததைப் பற்றியும் காதல் அழகியலை கோட்பாட்டு ரீதியாக திரையிசைப் பாடல்களுக்குள் அடக்கமுடியுமா என்ற கேள்வியோடு தொடர்ந்து  திரைப்படப் பாடல்கள் எழுதிய தனது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். சினிமாவில் பாடல் உருவாகும்முறை, சூழ்நிலைக்கேற்ப எவ்வாறு பாடல் புனைவது,  மெட்டுக்குப் பாட்டமைத்தல், பாட்டுக்கேற்ற மெட்டமைத்தல் மற்றும் கவிதைகள் எவ்வாறு பாடலாக உருப்பெறுகின்றன  என்பதைப் பற்றி சரளமான நடையில் அனைவரையும் கவரும் வண்ணம் எடுத்துரைத்தார்.  தாம் எழுதும் அனைத்து திரைப்பாடல்களும் மரபைத் தழுவியே அமைவதாகவும் கூறினார்.

தான் ஒரு பாடலாசிரிராகவோ கவிஞராகவோ இவ்வுலகில்  அறியப்படுவதைவிட “நல்ல மனிதன்” என்று  அனைவராலும் அடையாளப்படுத்தப்படுவதையே பெருமை எனக் கூறிப் பார்வையாளர்களின்  பாராட்டைப் பெற்றார்.

தேன்மொழியின் பாடல் கலந்த வர்ணனையுடன் கூடிய நெறியாள்கை அனைவரையும் கவர்ந்தது.

இறுதியாக நன்றியுரையுடன், அடுத்த மாதக் கவிதைப் போட்டிக்கான தலைப்பாக “சலசலக்கும் சருகுகள்” எனும் அறிவிப்புடன்  நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.