விதைகள் மாணவர் கவிதைப் பயிற்சித் திட்டம்

0
1364

விதைகள்” மாணவர் கவிதை பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது கவிமாலை

கவிமாலையின் மாணவர்களுக்கான கவிதை பயிற்சித்  திட்டமான ”விதைகள்” அறிமுக நிகழ்ச்சி  கடந்த நவம்பர் 10 ஆம் தேதி, கேலோங் பொது நூலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் திருமதி பா.கங்கா, திருமதி பானு சுரேஷ் மற்றும் திரு. தா. மதிக்குமார் அவர்களின் தயாரிப்பில் மாணவர்களின் “கவி விதை கவிதை” என்ற மேடை நாடகம் சிறப்பாக  அரங்கேற்றப்பட்டது. இதில் பங்கேற்ற  மாணவர்கள்

1)விஷால் மைக்கேல் (Chua Chu Kang Secondary School)

2)வர்ஷினி அருள் (Bedok green secondary school)
3)முத்து சுவேதா (Republic Polytechnic)
4)அனன்யா வர்ஷா (Outram secondary School)
5) நரசிம்மமூர்த்தி தமிழ்மதி (National Junior College) ஆகியோரின் தமிழ் உச்சரிப்பும், ஆர்வமும் இந்தப் பயிற்சித் திட்டம் வெற்றிபெறும் என்பதை முன்னுரைப்பதாக இருந்தது.

கவிமாலையின் தலைவி திருமதி இன்பா  அவர்களின் தலைமையுரையில்,  இப்பயிற்சித் திட்டத்தின் நோக்கம் பற்றியும், எவ்வாறு செயல்படுத்தப்பட உள்ளது என்றும்,  அடுத்து வரும் பயிற்சித் திட்ட நாட்கள் குறிப்பையும் விளக்கினார். இப்பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றுள்ள   60 மாணவர்கள் பஞ்சபூத குழுக்களாக முறையே நிலம், நீர், நெருப்பு,  காற்று மற்றும் ஆகாயம் எனப்  பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவுக்கும்  ஒரு ஒருங்கிணைப்பாளர், ஒரு வழிகாட்டி என்று வகை செய்து, அனைத்துக் குழுக்களுக்கும் கவி ஆலோசகர்குழு மற்றும் மூத்த வழிகாட்டி குழு என்று   அமைத்து உள்ளதை விளக்கிச் சொன்னார்.

அடுத்ததாக தன்னுடைய மாணவப் பருவம் முதல் தற்போது வரையிலான கவிதை அனுபவங்களைச் சுவைபட எடுத்துக்கூறி மிகவும் சிறப்பாக உரையாற்றினார்  சுபாஷினி கலைக்கண்ணன்.

எந்த முக்கிய நிகழ்வானாலும் சுப இசையோடு தமிழர்கள் ஆரம்பிப்பார்கள். அதற்கேற்றாற்போல் இந்த தொடக்க நிகழ்ச்சியில் கவிஞர் திரு. இசை அவர்கள் கலந்துகொண்டு “கவிதையின் விநோதங்கள்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.  கவிதை தோன்றிய வரலாறு, கவிதை பற்றிய குறிப்புகள் ஆகியவற்றைப் பற்றிச் சொல்லி பின்னர் புதுக்கவிதைகள் சிலவற்றைப் பகிர்ந்துகொண்டு அவற்றின்  விளக்கத்தைக் கூறி அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார். பின்னர் நடைபெற்ற கேள்வி-பதில் அங்கத்தில் அவையோரின் கேள்விகளுக்கு இயல்பாய், பதில் அளித்தார்.

சிறப்பு விருந்தினராக நியமன நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு. இரா. தினகரன் ஜே.பி அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களின் ஊக்கத்தைக் கண்டு மகிழ்ந்து, வாழ்த்திச்  சிறப்புரை ஆற்றினார்.

பின்னர் கலந்துகொண்ட மாணவர்களுக்குச் சான்றிதழ்களும், குறிப்பேடுகளும் வழங்கப்பட்டன.

செல்வி. ஸ்வாதி  மற்றும் செல்வி. ஸ்ருதி சகோதரிகள், தமிழ்த் தாய் வாழ்த்து இனிமையாகப்  பாடியதை கவிஞர் இசை கண்ணீர் ததும்ப உணர்வுபூர்வமாகப் பாராட்டினார்.  கவிமாலை செயலவை உறுப்பினர் திரு. ராஜு ரமேஷ் அவர்கள்   நெறியாளராகவும் வழி நடத்தினார். மாலை உணவோடு நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.