கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கவிமாலை நிறுவிய நாள் இன்று.
சிங்கப்பூரில் பார்வையாளராக வந்தோரையும் கவிஞர்களாக்கிய பெருமை கவிமாலை அமைப்புக்குண்டு. கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் தவழ்ந்த புதியவர்களை ஊக்கப்படுத்தி மொழிநடையைப் பயில வைத்து நூலாசிரியர்களாக்குவதும், தலைமைப் பண்பை வளர்த்து அமைப்புகளின் தலைவர்களாக்குவதும் தயக்கத்தையும் தாழ்வு மனப்பான்மையும் போக்கித் தலைநிமிர்ந்து பேச வைப்பதும் கவிமாலையின் சிறப்புகள்.
கருத்துச் சுதந்திரம், குடும்பம் போன்ற பிணைப்பு, இளையோருக்குத் தாய்மொழியான தமிழின்மீது ஈடுபாடு போன்ற தனித்தன்மைகள்தான் கவிமாலை இருபதாண்டுகளாக மணம் வீசிக் கொண்டிருக்க முக்கியக் காரணங்கள். இந்த வெற்றிப் பயணத்துக்குக் காரணம் கவிஞர்களே.
கவிமாலைப் பற்றிய தனது அனுபவங்களுடன்
இன்று கவிமாலையின் நிறுவனர் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ.
கடற்கரைச்சாலை கவிமாலை.
-நிறுவுநர் பிச்சினிக்காடு இளங்கோ.
தமிழ்தான் தமிழரின் முகவரி.
• மொழி அழகாய் இருப்பது கவிதையில்.
• மொழியை அழகாக வைத்திருப்பது கவிதைதான். அந்தக்கவிதைக்காக, வளர்ந்து சிறந்து விளங்கும் கவிமாலையை நிறுவியநாள் இன்று.
கவிதைக்காக கவிஞர்களே நடத்தும் அமைப்பு கவிமாலை.
இரண்டாயிரமாம் ஆண்டில் ஜூன் 24 ,கம்போங்கிளாம் சமூக மன்ற இந்திய நற்பணிச்செயற்குழுவின் ஆதரவோடு குறிப்பாகத் தலைவர் சுப்பிரமணியம் அவர்களின் ஆதரவோடு தொடங்கப்பட்ட அமைப்பு. தொடங்கிய நாள் கண்ணதாசனின் பிறந்தநாளாக அமைந்துவிட்டது. யாருடைய பாராட்டுதலுக்காகவும் அங்கீகாரத்திற்காகவும் தொடங்கப்பட்ட அமைப்பல்ல. தமிழ்க்கவிதைக்காக, தமிழ்க்கவிஞர்களுக்காக, எது கவிதை? என்ற தேடலோடு தொடங்கப்பட்ட அமைப்புதான் இது. வளர்ந்தவர்கள் வந்து இங்கே வழிகாட்டியிருக்கிறார்கள். வளரவேண்டும் என்று முயன்றவர்கள் வந்து வளர்ந்திருக்கிறார்கள். ஒரு கவிஞனின் பிறந்த நாளில் தொடங்கப்பட்ட அமைப்பு கவிதையைப்போல் மக்கள் நெஞ்சில் வாழ்ந்துகொண்டிருக்கிறது; வளர்ந்துகொண்டிருக்கிறது. தமிழ்க்கவிதையின் மரபு மரபுக்கவிதைதயாகும். ஆனால் புதுக்கவிதை என்ற வடிவம் வந்த பின்பு , புதுக்கவிதையை வெறுக்கும் மரபுக்கவிஞர்களும், மரபுக்கவிதையைத் தவிர்க்கும் புதுக்கவிதை எழுதும் கவிஞர்களும் பெருகிய காலகட்டத்தில் கவிஞர்களுக்கிடையே ஓர் இடைவெளி ஏறபட்டது. இதை இணைக்கும் விதமாகவும் , எதை எழுதினாலும் அது கவிதையாக இருக்கவேண்டும் என்ற சீரிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டும் தொடங்கப்பட்ட அமைப்பு கவிமாலை. தொடக்கத்தில் கம்போங்கிளாம் சமூக மன்றத்திலும் பின்பு ஜாலான்புசார் சமூக மன்றத்திலும் தொடர்ந்தது. வடித்த கவிதைகளும் படித்தில் பிடித்த கவிதைகளும் பறிமாறப்பட்டன. மாதந்தோறும் பரிசுகள் சிறந்த கவிதைகளுக்கு வழங்கப்பட்டன. வருகை தந்த அனைவரும் தங்களுடைய கருத்துகளைச் சுதந்திரமாகப் பதிவுசெய்வதற்கும் கவிமாலை இடம் கொடுத்தது. தொடக்கத்தில் வந்திருந்த அனைவரும் சிறந்த கவிதைகளுக்கு மதிப்பெண்கள் போட்டு இறுதியில் அதிக மதிப்பெண் பெற்ற கவிதையைப் பரிசுக்குரிய கவிதையாகத் தேர்ந்தெடுத்தனர். உள்ளூர் கவிஞர்களின் கவிதைகளைப்பற்றி பட்டிமன்றம் நடத்தப் பட்டது. உலகக்கவிஞர்களையும் அழைத்து வந்து அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.
புலாவ் உபின், செயின்ட் ஜான்ஸ் தீவு,கொசுத்தீவு, கிழக்குக்கடற்கரை, மேற்குக்கடற்கரை, பூமலை, மெக்ரிச் நீரணை, செந்தோசா போன்ற இடங்களில் கவிமாலையை நடத்தி இருக்கிறோம். கவிமாலை அமைப்பு குடும்ப பிணைப்பையும் உருவாக்கி ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு ஒவ்வொருவரும் தன்னை உயர்த்திக்கொள்ள அடித்தளமிட்டிருக்கிறது.
கிழக்குக்கடற்கரையில் கவி இரவு நடத்தி, பொழுது விடிந்து காலையில் கபடி விளையாடி ,கடலில் குளித்து வந்ததெல்லாம் மறக்கமுடியாதவை. மரபுக்கவிதையின் இலக்கண வகுப்பை மூத்த கவிஞர் இக்பால் அவர்களும் கவிதை நதி ந.வீ.விசயபாரதியும் நடத்தியதால் மரபில் கவிதை எழுதும் கவிஞர்கள் உருவானார்கள்.
புகழ்பெற்ற கவிஞர்களெல்லாம் வருகை தந்து சிறப்பித்திருக்கிறார்கள். தமிழிலக்கியத்திற்குப் பாடுபட்ட பெருமக்களுக்குக் கணையாழி விருது 2003-லிருந்து வழங்கப்பட்டு வருகிறது. அந்தக்கருத்தை முன்மொழிந்தவர் கவிஞர் இக்பால். பி.பி.காந்தம் அவர்களுக்கு கணையாழியுடன் $1000 வெள்ளியும் பரிசாக வழங்கியது கவிமாலை. இரண்டாயிரமாம் ஆண்டில் கவிஞர் இக்பாலின் கவிதை ஜெர்மனி ஹனோவர் நகரில் நடைபெற்ற உலகபொருட்காட்சியில் இடம்பெற்றதைப் பாராட்டி ஒன்பது பவுனில் பொன்மாலை ஒன்று வழங்கப்பட்டது. அதற்கு உறுதுணையாக இருந்தவர் அண்ணன் மா. அன்பழகன்.
இன்றும் சமூக மன்றங்களில் கவியரங்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கவிமாலை கவிஞர்களின் நூல்கள் கவிமாலை சார்பாக வெளியிட்டு அவர்களைப் பெருமை படுத்தியது கவிமாலை. 2008வரை கவிமாலையை நான் கவிஞர்களின் ஆதரவோடு நடத்தி வந்தேன். 2008இல் பணிநிமித்தம் நான் தமிழகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. 2008-ல் என் நூல்களையும் கவிமாலையில் வெளியிட்டேன். அதனை வெளியிட்டதோடு , அடுத்த நாள் புதுமைத்தேனீ. மா.அன்பழகன் அவர்களுடைய நூல்களை வெளியிட்டுவிட்டுச் சென்னை சென்றேன். அண்ணன் அன்பழகனும், கவிதை இரட்டையர்கள் ந.வீ.சத்தியமூர்த்தியும், ந.வீ விசயபாரதியும் இணைந்து கவிமாலையைத் தொய்வின்றி நடத்தி வந்தார்கள். மாதந்தோறும் பரிசுகள் வழங்க முன்வந்த புரவலர் ஜோதிமாணிக்க வாசகம் அவர்களையும் அறிமுகப்படுத்தினேன்.
பின்பு பதிவுசெய்யப்பட்ட அமைப்பாக கவிமாலை அமைந்தது. இக்கவிமாலையின் தலைமைப் பொறுப்பினை முதன்முதலாக ஏற்றவர் சிங்கப்பூர் சித்தார்த்தன். இரண்டாவது வாய்ப்பு, கவிஞர் இறைமதியழகனிடம் சென்று சேர்ந்தது. கவிமாலையின் தற்போதைய தலைவர் இன்பா.
கணையாழி விருதுக்குப் பிறகு பல்வேறு விருதுகள், திட்டங்கள், முயற்சிகள்,பயிற்சிகள், சாதனைகளென கவிமாலை தொடர்கிறது.
அன்று தொட்டு இன்றுவரை தனிமனித வழிபாட்டுக்கு இடமின்றிக் கவிதைக்காகக் கவிஞர்கள் நடத்தும் அமைப்பு கவிமாலை.
கவிமாலை கவிஞர்கள் தேசிய அளவில் விருதுகளையும் பரிசுகளையும் பெற்று பெருமை சேர்த்திருக்கிறார்கள். இன்று உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது கவிமாலை.பங்குபெற்ற கவிஞர்களின் பட்டியல் நீளும். அதைப்பங்குபெற்ற கவிஞர்கள் கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும். என்னுடைய நூலில் விரிவாகக் குறிப்பிடுகிறேன்.
கவிதை கவிஞர்களுடையது. சிறந்த கவிதையைப்படைத்தால் அந்தப்பெருமை கவிஞரையே சாரும். ஆனால், கவிதைக்கும் கவிஞர்களுக்கும் கவிமாலை தடமாகவும் தளமாகவும் விளங்கியது; விளங்குகிறது என்பதே உண்மை.
கவிதையாய் வாழ்வோம்.
அன்புடன் பிச்சினிக்காடு இளங்கோ