மாணவர் கவிதைப் பயிலரங்கு 2022

0
1213

கவிமாலை நடத்திய மாணவர் கவிதைப் பயிலரங்கு 2022

மாணவர்களுக்கான கவிதைப் பயிலரங்கு மற்றும் மொழிப்பெயர்ப்புப் பயிலரங்கு மற்றும் கவிதைப் போட்டியை  மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி. மாணவர்களுக்காகக் கடந்த மார்ச் 5 2022 ஆம் தேதி கவிமாலை நடத்தியது.   35 பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து சுமார் 155 மாணவர்கள் பயிலரங்கிற்குப் பதிவு செய்திருந்தனர்.

நிகழ்வில் முதலில் கவிதை குறித்து கவிஞர் மோகனரங்கன் அவர்கள் மாணவர்களுக்கு சூம் செயலி மூலம் உரையாற்றினார். மரபுக் கவிதைகள் துவங்கி, புதுக்கவிதைகள் உருவாகி 100 வருடங்கள் ஆகிறதென்பதைக் கூறி அச்சுத்தொழில் துவக்கம் பின் அதன்பின்பான புத்தகங்களின் வருகை என வரலாற்றுப்பின்புலத்தை எளிய விளக்கங்களுடனும் வாழ்விலிருந்தே சிறிய உதாரணங்களுடனும் புதிதாக கவிதை குறித்து அறிந்து கொள்ளும் மாணவர்கள் புரியும் வகையில் மிக அழகாக எடுத்துக்கூறினார். புதுக்கவிதைகளை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதை கவிஞர்கள் பிரமிள், தேவதச்சன் மற்றும் விக்ரமாதித்யன் அவர்களின் கவிதைகளை மேற்கோள் காட்டி கவிதை குறித்தான ஒரு புரிதலை மாணவர்களுக்கு உருவாக்கினார். எழுதுவது எல்லாமே கவிதையாகிவிடுவதில்லை என்றும், அதன் உருவம், உள்ளடக்கம் தொடர்பான தெளிவை உணர்த்தினார். கவிதை தொடர்ந்து வாசிக்கப்படவேண்டிய தேவை மற்றும் ஏன் கவிதை எழுத வேண்டும் என்பதையும் தனது உரையில் முன்வைத்தார். தமிழ்க் கவிதைகள் குறித்து புதியவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான உரையாக கவிஞர் மோகனரங்கன் அவர்களின் உரை அமைந்திருந்தது.

அடுத்த நிகழ்வாக, கவிதை மொழிபெயர்ப்பு குறித்து சிங்கப்பூர் எழுத்தாளர், கவிஞர் மஹேஷ்குமார் அவர்கள் மாணவர்களை வழி நடத்தினார். வேற்று மொழிக் கவிதைகள் வாசிப்பதற்கான தேவை என்ன என்பதை ஒவ்வொன்றாக விளக்கினார். ஒரு புதிய உலகை அறிந்து கொள்ளவும், புதிய காட்சி, தேடல் மற்றும் வாழ்வைக் குறித்த புதிய பரிணாமத்தை உணரவும் வேற்றுமொழிக் கவிதைகள் உதவுவதாக தனது உரையில் முன்வைத்தார். பெறுமொழி மற்றும் தருமொழி இருமொழிப் புலமைக்கான அவசியத்தையும், தருமொழியின் நிலவியல், அரசியல் மற்றும் பண்பாடு ஆகியவை அறிந்து கொள்ள வேண்டியதன் மகத்துவத்தையும் கூறி வேற்றுமொழிக் கவிதையின் கரு சொல்லவருவதைச் சரியாகப் புரிந்து கொள்வது என மொழிபெயர்ப்புக்குத் தேவையானவற்றை தனக்கே உரிய எளிய மொழியில் மாணவர்கள் புரியும் வகையில் விளக்கினார். மொழிபெயர்ப்பில் கவனிக்க வேண்டிய உத்திகளையும் நடுநிலையாக நிற்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார். மொழிபெயர்ப்பின் வகைமைகளான சொல்சொல்லாக மொழிபெயர்த்தல், சுருக்கமாக மொழிபெயர்த்தல், விரிவாக மொழிபெயர்த்தல், தழுவலாக மொழிபெயர்த்தல் மற்றும் மொழியாக்கம் ஆகியவற்றின் நிறைகளை மட்டுமல்லாது மொழிபெயர்ப்பில் காணும் இடர்களையும் சிக்கல்களையும் சுட்டினார். மொழிபெயர்ப்புத் தன்மைகான தெளிவு, பொருத்தம், மாறுபாடின்மை மற்றும் எளிமை ஆகியவற்றினை விளக்கினார். உதாரணத்திற்கு Anaïs Nin எழுதிய Risk என்ற ஆங்கிலக் கவிதையை எடுத்துக்கொண்டு எப்படி மொழிபெயர்க்க வேண்டும் என்பதை தனது இருவேறு மொழிபெயர்ப்பை எடுத்தாண்டு விளக்கினார்.

இறுதியாக, மாணவர்களுடனான கலந்துரையாடலுடன், கவிமாலை நிகழ்த்தும் கவிதைப் போட்டிக்கான அறிவிப்பு நிகழ்ந்தது. மேல் நிலை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியின் முதற்கட்டப் போட்டியாக,  தலைப்பு மற்றும் படங்கள் கொடுத்து கவிதை எழுதி அனுப்பும் போட்டி மற்றும்   கொடுக்கப்பட்ட 10 ஆங்கிலக்கவிதைகளியக் கொண்டு மொழிப்பெயர்ப்புக் கவிதைப் போட்டி ஒன்றையும் அறிவித்தது.  

பயிலரங்கு மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றதாகப் பங்குபெற்ற ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்