ஒரு மொழி அழகாய் இருப்பது கவிதையில்தான் என்பதை நன்கு உணர்ந்து தமிழ்மொழியில் கவிதை ஆற்றலை வளர்க்கவும், தமிழ்க்கவிதை வளரவும், தமிழ்க் கவிஞர்களை உருவாக்கவும் எண்ணித் தொடங்கப்பட்டதுதான் கவிமாலை.
கடற்கரைச் சாலைக் கவிமாலை ( Kavimaalai at Beach Road )
கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவின் நான்கு மாத முயற்சியில் சிங்கப்பூர் கம்போங்கிளாம் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுத் தலைவர் திரு.மு. சுப்பிரமணியம் அவர்களின் ஆதரவோடும், கம்போகிளாம் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் ஒத்துழைப்போடும் 24.06.2000இல் தொடங்கப்பட்டது.
தொடங்கிய நாள் கவியரசு கண்ணதாசனின் பிறந்தநாள்.
அன்று சிங்கப்பூரின் மூத்த, இளைய கவிஞர்கள் 26 பேர் கலந்து கொண்டு இந்தத் தொலைதூரக் கவிப்பயணத்தைத் தொடங்கி வைத்தார்கள்.
அன்று முதல் ஒவ்வொரு ஆங்கில மாதத்தின் கடைசி சனிக்கிழமை மாலை கவிமாலையாக மலர்ந்து வருகிறது. கலந்துக்கொள்ளும் கவிஞர்கள், தாங்கள் வடித்த, படித்த தங்களுக்குப் பிடித்த கவிதைகளை அரங்கேற்றுவார்கள்.
‘இதுதான் கவிதை’ என்ற தேக்கநிலை இல்லாமல் ‘எது கவிதை’ என்ற தேடலோடு கவிமாலை இயங்கி வருகிறது.
கவிஞர் க.து.மு. இக்பால் அவர்களைத் தொடர்ந்து கவிஞர் ந.வீ.விசயபாரதி நடத்தி வந்த ’யாப்பிலக்கண வகுப்பு’ பலரையும் மரபுக்கவிதை எழுதும் கவிஞர்களாக உருவாக்கி வருகிறது.
மாதந்திரக் கவிமாலை நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்தும், பிற நாட்டிலிருந்தும் கவிஞர்கள் தமிழறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியிருக்கிறார்கள்.
கவிமாலை விருதுகள்
சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்திற்குப் பணியாற்றிய சிறந்த படைப்பாளர்களுக்கு விருது வழங்கிச் சிறப்புச் செய்ய முடிவெடுத்து ‘கவிமாலை இலக்கியக் கணையாழி விருது’ 2003ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.
சிங்கப்பூரின் சிறந்த கவிதை நூலுக்கு ஆண்டுதோறும் 5 பவுன் தங்கப் பதக்கம் 2009ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
திங்கள்தோறும் நிகழும் கவிமாலையில் கலந்துகொள்ளும் போட்டிக் கவிதைகளில் இருந்து தேர்வுபெறும் சிறந்த கவிதையை எழுதிய கவிஞருக்குத் “தங்க முத்திரைக் கவிதை” என்ற பெயரில் தங்கக் காசு 2010 முதல் பரிசளிக்கப்படுகிறது.
2008ஆம் ஆண்டு முதல் கவிமாலைக் கவிதைகள் நூல் வடிவில் தொடர்ச்சியாக வெளியிடப்படுகிறது.
கவிமாலை ( Kavimaalai at Jalan Besar CC)
ஐந்தாண்டுகளுக்கும் மேலாகக் கம்போங்கிளாம் சமூக மன்றத்தில் நடைபெற்ற கவிமாலை தற்பொழுது ஜாலான்புசார் சமூக மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் போக்குவரத்து வசதியும் சிங்கப்பூர் நாணய மாற்றுச் சங்கத்தின் தலைவர், புதிய நிலா ஆசிரியர் திரு. ஜஹாங்கீர் அவர்களின் ஆதரவும் ஆர்வமும் ஆகும்.
2004இல் சிங்கப்பூர் கொள்கை ஆய்வுக்கழகத்தின் துணை இயக்குநர் திரு. அருண்மகிழ்நன் தலைமையில் தேசிய நூலக வாரியத்தின் சார்பில் தேசிய அளவில் நடைபெற்ற ‘வாசிப்பை நேசிப்போம்’ என்ற 24 மணி நேர வாசிப்பில் ஒரு மணி நேரத்தைக் கவிமாலையும் எடுத்துக்கொண்டு கவிதை வாசித்துத் தன் பங்கை ஆற்றுயிருக்கிறது.
அரசும், வளர்தமிழ் இயக்கமும் இணைந்து நடத்தும் தமிழ் மொழி மாத விழாவில் 2010ஆம் ஆண்டு கவிமாலையும் இணைந்து கொண்டது.
கவிமாலை இன்றைக்கு தீராநதியாக ஒடிக்கொண்டிருக்கிறது. கவிதை நதியை வளப்படுத்திய கவிஞர்களும் உண்டு; வளம் பெற்ற கவிஞர்களும் உண்டு.
நல்ல தமிழ்க் கவிதையை, நல்ல தமிழ்க் கவிஞர்களை எதிர்காலம் பெறவும், பெற்றெடுக்கவும் கவிமாலை தொடர்கிறது.
பிச்சினிக்காடு இளங்கோ சென்னை சென்றதால் 2008 ஏப்ரலில் இருந்து புதுமைத்தேனீ மா.அன்பழகன் அவர்களைக் காப்பாளாராக் கொண்டு கவிஞர்கள் ந.வீ. சத்தியமூர்த்தி, ந.வீ. விசயபாரதி மற்ற நெடு நாள் கவிமாலைக் கவிஞர்களின் ஒத்துழைப்போடு கவிமாலையைத் தொய்வின்றி, இன்னும் சிறப்பாக நடத்தி வந்தது பாராட்டுக்கும் பெருமைக்கும் உரியது.
கவிமாலை சிங்கப்பூர் ( The Society of Tamil Poets, Singapore)
கவிமாலை முறையாகப் பதிவு செயப்படவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, அதற்கான சுமார் 9 மாத முயற்சியின் பலனாக 27-ஜூன்-2015 அன்று கவிமாலை சிங்கப்பூர் என்ற பெயரில் சிங்கப்பூர் அரசாங்கச் சமூக அமைப்புகளின் சட்டத்தின் கீழ அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகம் புதிய பொலிவு பெற்று தற்போது, சிங்கப்பூர் நடைமுறைப்படி மூத்த தலைமுறை அருகிருந்து வழிகாட்ட, புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட செயலவை, கவிமாலை அமைப்பை அதன் அடுத்த இலக்கு நோக்கி நடத்திச் செல்லத் துவக்கியிருக்கிறது.
கவிஞர்களின் அதரவை, அறிஞர்களின் வழிகாட்டுதலை வணங்கி வருங்காலத்தை வரவேற்கிறது புதிய செயலவை.