விழி தேடும் வெளி

0
538

கோலிக் குண்டுகளினுள்
சூழ்ந்திருக்கும் செடிகளுக்கு
யார் தண்ணீர் ஊற்றுகிறார்களென
மழலையின் மொழியில்
கேட்கத் துவங்குகிறது
குழித்தட்டில் கோலி விளையாடும்
விரல்கள்..

தன் முன்னிருக்கும் குழிக்குள் துழாவும்
காற்றுக்கும் கேட்காது
உரையாட ஆரம்பிக்கிறது
எதிரிருக்கும் பெருவிரல்..

யாதொரு முடிவுகளுமற்ற
உரையாடலைக் கேட்க
ஓடி வந்து அமர்ந்து கொண்டது
வரவேற்பறையில் அதுவரை
உறங்கிக் கொண்டிருந்த
பூனைக்குட்டி!

நீண்ட மௌனத்தினைக் கலைத்த
பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும்
இடையே அகப்பட்ட
நீலம் பாரித்த
விழிகளை உற்று நோக்கியது
கோலிக்குண்டுக் கண் வழியே
அந்தப் பூனை..

சாளரத்தின் வன்காற்றொன்று
அடித்து மூடிய
கதவின் கடைசி கணத்தில்
நுழைந்து உருண்டு கொண்டிருந்தது
ஒரு அரூப விரல் மொக்கு..

விளையாடும் வட்டங்களைக்
கடந்த குண்டு,
தாவிச் சென்று அவ்விரலைத்
தழுவிக் கொண்டது..

வீட்டின் கதவருகில் உருண்டு
வெளியேறும் எண்ணத்தைத்
தூக்கி விழுங்கி
இப்போது மலங்க மலங்க
விழிக்கத் துவங்கியிருந்தது
குண்டு குதப்பும் பூனை..!

  • – ச. மோகனப்ரியா