நடக்கும் கூடுகள்

0
496

🍂🍂🍂
மடி சாய்ந்துறங்கும் மகளினை
மரத்தடியில் கிடத்தி
இரயில் சக்கரங்களுக்கு உயிர்கொடுத்து
மேல்நோக்கிப் பறக்கிறாள் பரதேவதை.
கூட்டினிடையே சுருண்டிருக்கும்
மரவட்டைக் கால்களின்
அசைவென நெளிகிறது ஒரு
பறவைக்குஞ்சின் பசி.
பவளப்பாறைகள் ஏகும் குதிரைமீன்களின்
மேல்கீழ் நீந்தலென
ரயில் கடக்கும்
தண்டவாளத்தின் அதிர்வுகள்
குஞ்சுகளின் கால்களையும்
பற்றிக்கொண்டிருக்கின்றன.
நாளங்கள் வழி
பாதங்கள் கதறும் சத்தம்
பசியடைத்த காதுகளுக்கு
எட்டும் முன் கண்களுக்கு
எப்படியோ சென்றுவிடுகின்றன.
நீங்கள்
கூடு விட்டு வரும் காலங்களில்
சாலையில் நிரம்பியிருக்கலாம்
நைந்த உடல்களின்
எஞ்சிய கூடுகளும்
விட்டுச்சென்ற கண்ணீரின்
உப்பு குவியல்களும்.
🍂🍂🍂

  • ச. மோகனப்ரியா