வீட்டிலிருந்து வேலை
மீன் தொட்டிக்கு அருகில்
அலுவல் மேசை
இந்த மீன்
எப்படி வந்தது தொட்டிக்குள்
தூண்டிலில் பிடிக்கவில்லை
தானாகவும் குதிக்கவில்லை
மீன் பிறந்த ரகசியத்தை
ஆற்றிடம் கேட்கலாமா
நதியின் பாடல்தான்
மீனுக்குச் சங்கீதம்
இப்போது என் குரல்
சலனமா
சந்தோசமா
தெரியவில்லை
யாருடன் என்னப் பேசுகிறேனென்ற
ரகசியம் அந்த மீனுக்கு
மட்டுமே தெரியும்
கோபமாகப் பேசும்போது
மூலையில் அமைதியாக
ஒடுங்கி நிற்கிறது
சிரித்துப் பேசும்போது
குதூகலத்துடன் இங்குமங்கும்
மோதித் திரும்புகிறது
பக்கத்திலேயே
அமர்ந்திருந்தாலும்
ஒருநாள்கூட
மீனோடு பேசியதில்லை
மீனும் இதை
நினைத்திருக்குமா
- இன்பா