கபாலமற்ற கரையான்கள்

0
468

என் புத்தக அலமாரியிலிருந்து
நூல்களைக் கடன் வாங்கிச் சென்றான்
நண்பன்
அவனைப் பார்க்க
எதேச்சையாகத்தான் சென்றேன்
அவனது உள்கூடஅறை மினுக்கியிருந்தது
கைப்பிடித்துப் பார்க்கிறேன் நூல்களை
நேருவின் கடிதங்களில்
நசுங்கிக்கிடந்தன கால்கள்
தட்டிவிட்டதும் விழுந்தது
தலையறுந்த பூச்சி
அன்னாவின் முகம் நசுங்கியதற்காக
விரான்ஸ்கி முறைத்துக்கொண்டிருந்தான்
பழுத்துப்போன காந்தியின்
பக்கங்களுக்கு வந்தது சோதனை
போர்கெஸ் வெளியில் கிடக்க
தாகூரும் கிப்ரானும் புலம்பினர்
நகுலனும் பிரமிளும் அபியும்
நல்லவேளை தப்பித்தனர்
நீண்ட கொடுக்குகளின்
சிறகுகளை விரிக்க முடியாமல்
மல்லாக்கக் கிடந்தது கரையான்
என்னைக் கண்டதும்
கைகால்களை உதறி
எழுந்து வந்து
குரல்வளையைப் பிடித்தது
அவனது கதையை
எறும்புகள் உருட்டிச்செல்ல
கையில் விரித்திருந்த கவிதை நூலில்
ஊர்ந்து செல்கின்றன கபாலமற்ற கரையான்கள்

  • இன்பா