பிடோக் நதி அமைதியாக ஓடுகிறது

0
496

இந்த ஆற்றின் குரல்களை கேட்கச்சொன்ன
வாசுதேவனும் இல்லை
இந்த ஆற்றின் எண்ணற்ற ஓசைகளைக் கேட்கும்
சித்தார்த்தனும் இல்லை
ஆறு எங்கே செல்கிறது
பிடோக் பேராறு
அமைதியாய்
பேரமைதியாய்
மெல்ல அசைகிறது
நீரை யாரும் தொடுவதில்லை
கைகால்களை நனைப்பதில்லை
குளிப்பதில்லை
யாருக்கும் அன்போ வெறுப்போ
எதுவுமே
இந்த ஆற்றின் மீது இல்லை
கொட்டும் மழையில்
மறுபடியும் நிறைகிறது
மறுபடியும் தவிக்கிறது
இருபுறமும் ஆயிரமாயிரம் கண்கள்
வேடிக்கைப் பார்த்தபடி கடக்கின்றன
காற்றை உள்வாங்கியபடி
கரையில் தனிமையில்
இளைப்பாறுகிறது மணல்
ஒரு சின்னஞ்சிறு பறவையின் சலனத்தில்
மெல்ல ஆடியாடி நகர்கிறது
பிடோக் பேராறு

  • இன்பா