மார்க்வெஸின் தூங்கும் அழகி

0
435

மார்க்வெஸ் அழகியை ஏன்
தூங்க வைத்தாரென
உங்களைப் போல் எனக்கும் ஆச்சரியம்தான்
அழகிகளின் அழகிய கண்கள்
பதித்து வைத்த கறுப்பு வைரங்கள்
தூங்கும் கண்கள்
அப்போதுதான் தூங்கி விழித்த கண்கள்
காமம் ததும்பும் கண்கள்

தூங்கச் செல்கையில்
அழகி நினைவுக்கு வருகிறாள்
அவளது விழிகள் வந்து போகின்றன
விமானத்தின் பக்கத்து இருக்கையில் அமர்ந்து
மார்க்வெஸ் எப்படி ரசித்திருப்பாரென
நானும் பார்க்கிறேன்
லோரியலின் வளைந்த
முள்ளெலி தூரிகையால்
மஸ்காரா போடுகையில்
இதழ்கள் குவிகின்றன
விழிகளில் சித்திரம் வரைய
பேழையில் மிதக்கும் பாவையில்
தேவதை வந்து நிற்கிறாள்
கவிதைகளைப் போல்
கண்களும் தூங்குகின்றன

  • இன்பா